முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் : 36 கோவில்களில் 43 புதிய திட்டப்பணிகள்..!
முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 592 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 36 திருக்கோயில்களில் கட்டப்படவுள்ள புதிய இராஜகோபுரம், திருமண மண்டபங்கள், பக்தர்கள் தங்கும் விடுதி, வணிக வளாகங்கள், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், பல்நோக்கு மண்டபம், வசந்த மண்டபம், முடிகாணிக்கை மண்டபம், கலையரங்கம், அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு, பக்தர்களுக்கு ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் அமைக்கும் பணிகள், வள்ளலார் சர்வதேச மையம் அமைத்தல், ஆன்மிக கலாச்சார மையம், உதவி ஆணையர் அலுவலகம், பள்ளி மற்றும் கல்லூரி வகுப்பறை கட்டடங்கள், ஓதுவார் பயிற்சிப் பள்ளி மற்றும் பெண்கள் தங்கும் விடுதி போன்ற 43 புதிய திட்டப் பணிகளுக்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலில் 159 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்களுக்கு ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் அமைக்கும் பணிகள், திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 106.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல், பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியில் வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் நூலகம் கட்டும் பணிகள்; கடலூர் மாவட்டம், வடலூர், திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் 99.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகள், விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் 65.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முகப்பு தோரண வாயில்கள் மற்றும் சுற்றுச்சுவர் அமைத்தல், முடிக்காணிக்கை மண்டபம் விருந்து மண்டபங்கள் மற்றும் கலையரங்கம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் உள்ளிட்ட மொத்தம் 36 திருக்கோயில்களில் ரூ.592.38 கோடி மதிப்பீட்டிலான 43 புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், ஆணையர் முரளீதரன், தலைமைப் பொறியாளர் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக அமைச்சர் ஆர். காந்தி, சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன், மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.