பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் சரவணன்(55). இவர் நாக்பூரில் உள்ள மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையில் (பெசோ) உரிமம் பெற்று, செங்கமலப்பட்டி அருகே ‘சுதர்சன் பயர் ஒர்க்ஸ்’ என்ற பட்டாசு ஆலையை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட அறைகளில் 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பட்டாசு ஆலையில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 7 அறைகள் தரைமட்டமானது, 7 அறைகள் சேதமடைந்தது. மேலும் சம்பவ இடத்தில் 4 பெண்கள் உட்பட 6 பேரும், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 2 ஆண், 1 பெண் என மொத்தம் 9 பேர் உயிரிழந்து விட்டனர். காயமடைந்த 4 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்தில் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரி ஜனா, பட்டாசு தனி வட்டாட்சியர் திருப்பதி, ஏடிஎஸ்பி சூர்யமூர்த்தி, டிஎஸ்பிக்கள் சுப்பையா, பவித்ரா, முகேஷ் ஜெயக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த விபத்தில் பாறைப்பட்டியைச் சேர்ந்த மாயாண்டி மனைவி ஆவுடையம்மாள் (80), சிவகாசி சிலோன் காலனியைச் சேர்ந்த மச்சக்காளை மனைவி முத்து(57), மத்திய சேனையை சேர்ந்த சந்திரசேகர் மகன் ரமேஷ்(31) ஆகியோர் உயிரிழந்தனர். மற்றவர்களது உடலை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கீழதிருத்தங்கல் கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பில்,
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கீழதிருத்தங்கல் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று(9.5.2024) எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் உட்பட 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், உடனடியாக மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.