ரூ.603 கோடியில் விருதுநகருக்கு திட்டங்கள் அறிவிப்பு - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
விருதுநகர் மாவட்டத்துக்கு ரூ.603 கோடி மதிப்பிலான பல்வேறு சிறப்புத் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன் விபரம் வருமாறு:
- பட்டாசு விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி செலவுக்கான நிதியத்திற்கு ரூ.5 கோடி.
- காரியாபட்டி, திருச்சுழி வட்டங்களில் உள்ள கண்மாய் மற்றும் அணைகளை மேம்படுத்த ரூ.17 கோடி. காரியாபட்டி தெற்காற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு ரூ.21 கோடி விருதுநகர் கவுசிகா நதி, அருப்புக்கோட்டை கஞ்சம்பட்டி கண்மாய் உட்பட பல்வேறு நீர்நிலைகளை சீரமைக்க ரூ.41 கோடி. காலிங்கபேரி, வெம்பக்கோட்டை, ஆனைக்குட்டம், கோல்வார்பட்டி அணைகளை மேம்படுத்த ரூ.23.30 கோடியும், அணைப்பகுதியில் பூங்கா அமைக்க ரூ.2.74 கோடி.
- அருப்புக்கோட்டையில் 10 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் புதிய சிப்காட் அமைக்க ரூ.350 கோடி.
- சிவகாசி மாநகராட்சியில் நவீன வசதியுடன் கூடிய மாநாட்டு அரங்கம் அமைக்க ரூ.15 கோடி.
- வத்திராயிருப்பு பிளவக்கல் அணை பூங்கா மேம்பாட்டிற்கு ரூ.10 கோடி, ராஜபாளையம் சாஸ்தா கோயில் அருவி மேம்பாட்டு பணிக்கு ரூ.1.70 கோடி.
- விருதுநகர் நகராட்சியில் சாலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகளுக்கு ரூ.24.50 கோடி.
- ராஜபாளையம் நகராட்சியில் மழைநீர் வடிகால் பணிக்கு ரூ.13 கோடியும், கோடை நீர்தேக்கத்தை மேம்படுத்த ரூ.5 கோடி.
- அருப்புக்கோட்டை மழைநீர் வடிகால் பணிக்கு ரூ.3 கோடி, பூங்கா அமைக்க ரூ.1.5 கோடி.
- விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி நகரில் உள்ள நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ரூ.47.5 கோடி.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கழிப்பறை மற்றும் வாகன நிறுத்துமிடம் அமைக்க ரூ.2.10 கோடி.
- வத்திராயிருப்பு, ராஜபாளையம் பகுதிகளில் உள்ள 22 கண்மாய்களை புணரமைக்க ரூ.18.10 கோடி என மொத்தம் 20க்கும் மேற்பட்ட திட்டங்கள் ரூ.603.44 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்.
மாவட்டத்தில் உள்ள இரு அமைச்சர்கள் விடுத்த கோரிக்கைகளின் படி இந்த திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளுக்கு விரைந்து அராசணை பெற்று, பணிகள் தொடங்குவதற்கு நீங்கள் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கினார்.