இனி இவர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!
தமிழக காவல் துறையில் சிறப்பாக செயலாற்றிய காவலர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார். 159 மத்திய அரசு பதக்கங்கள் மற்றும் 301 முதலமைச்சர் பதக்கங்கள் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு இந்நிகழ்வில் வழங்கப்பட்டது.
தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசியதாவது: இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என்றும், தமிழகம் பெருமைமிக்க மாநிலமாக விளங்க காவல்துறை பங்கு முக்கியமானது எனப் பேசினார். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் காரணத்தினால் தான் தமிழகம் பல துறைகளில் சிறந்து விளங்கி வருகிறது.
காவல் துறையினரின் நலனை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மக்களை பாதுகாக்கும் காவலர்களை பாதுகாக்க வேண்டியது அரசினுடைய கடமை. காவல் துறையை மேலும் நவீனப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், தமிழக காவல் துறையில் பணி புரியும் பெண் காவலர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும் என அறிவித்தார். மேலும் கணவர், பெற்றோர் வசிக்கும் இடங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு பணி இடம் மாறுதல் அளிக்கப்படும் என்றும், மகப்பேறு விடுமுறை முடிந்த பின்னர் பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பும் இடங்களில் பணி வழங்கப்படும் எனவும் கூறினார்.