1. Home
  2. தமிழ்நாடு

தமிழக முதல்வர் ஸ்டாலின் இதற்காக வெட்கப்பட வேண்டும் - அண்ணாமலை..!

1

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இருபெரும் அதிர்ச்சி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தஞ்சை மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியை ரமணியை,26, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகக் கொலையாளி மதன் என்பவரைப் போலீசார் கைது செய்தனர்.

அதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பட்டப்பகலில் வக்கீல் கண்ணன் என்பவரை மற்றொரு வக்கீலின் உதவியாளர் அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஒரே நாளில் பட்டப்பகலில் நடந்த இரு சம்பவங்களுக்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலையும், தி.மு.க., அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: தஞ்சையில் பள்ளி ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்; ஓசூரில் வக்கீல் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவங்கள் தி.மு.க., அரசு நிர்வாகத்தின் மிக மோசமான சட்டம் ஒழுங்கு நிலையை எதிரொலிக்கின்றன. தமிழக முதல்வர் ஸ்டாலின் இதற்காக வெட்கப்பட வேண்டும். இது போன்ற விவகாரங்களைத் திசைதிருப்புவதற்கு பதிலாக, சிறிது நடவடிக்கை எடுத்திருந்தால், இது மாதிரியான சம்பவங்களைத் தடுத்திருக்கலாம். இது போன்ற சட்ட ஒழுங்கு மீறல்களை நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம், எனக் குறிப்பிட்டுள்ளார்.

கள்ளச் சாராய விற்பனையையும் கண்டு கொள்ளாமல், வழக்கு விசாரணையையும் மெத்தனப் பொக்கில் கையாண்டு, உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் போக்கில் தி.மு.க., அரசு செயல்பட்டு வந்திருப்பது, சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

தி.மு.க., அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்திற்குக் கொட்டு வைத்திருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 68 உயிர்கள் பலியானதை மூடி மறைத்து, வழக்கைத் திசைதிருப்ப முயன்ற தி.மு.க., அரசுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேல்முறையீடு என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காமல், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பான வழக்கை, சிபிஐ விசாரிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறோம்.

Trending News

Latest News

You May Like