இந்தியாவின் நட்சத்திரமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் : கே.எஸ்.அழகிரி..!

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை நினைவுகூறும் வகையில் வேலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 9) நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.அழகிரி பங்கேற்றார்.
இதையடுத்து, வேலூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ‘‘தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள நீண்ட கடிதத்தில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டத்திற்கும், மரபுக்கும் புறம்பாக எவ்வாறு செயல்படுகிறார் என்றும், ஒரு மாநில அரசுக்கு ஆளுநர் எவ்வாறு உதவ முடியும் என்பதற்கு மாறாக எவ்வாறு சிரமம் கொடுக்க முடியும் என்பதற்கு உதாரணமாக செயல்படுகிறார் என்பது குறித்து திறம்பட எழுதியுள்ளார். இதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது.
தற்போது இந்தியாவின் நட்சத்திரமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். அதனால் தான் அவரை குறிவைத்து மத்திய பாஜக அரசு சிரமம் கொடுத்து வருகிறது. இதனால் மக்களிடம் முதல்வருக்கு செல்வாக்கு அதிகரிக்குமே தவிர குறையாது.
ஆளுநர் சட்டத்துக்கும், மரபுக்கும் அப்பாற்பட்டவர் இல்லை. எனினும் அவர் ஊடுபயிர் போன்றவர். சுய அதிகாரம் இல்லாத, தனக்கு என எந்தவித பிரத்யேக வரம்பு இல்லாமல் செயல்படும் ஆளுநர் மூன்று நடவடிக்கைகளை எடுத்து பின்வாங்கினார். இது ஆளுநர் மாளிகைக்கு அழகல்ல. குடியரசுத் தலைவர் உடனடியாக முடிவெடுத்து தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும். இல்லை என்றால், ஆளுநர் எதிலும் பங்கேற்க முடியாத அரசாக மாறிவிடும்.
மேற்கு வங்க மாநில ஊராட்சித் தேர்தலில் 20 பேர் கொல்லப்பட்டிருப்பது மோசமான கலாசாரமாகும். ஆளும் அரசுக்கு வாக்குச்சாவடிகளை காப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டுமே தவிர வாக்குச்சாவடிகளை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கக்கூடாது. இது தவறான முன்னுதாரணமாகும்.
செந்தில் பாலாஜியை அசைக்க கூட முடியாது. விசாரணை நடக்கிறது என்பதற்காக அவர் குற்றவாளி அல்ல. அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர் அவ்வளவு தான். வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் அதிக இடங்களை கேட்க உள்ளோம்.
இலங்கை ராணுவம் கைது செய்வதைத் தவிர்க்க கடற்பரப்பில் தமிழகமும், இலங்கையும் எல்லைக்கோட்டை வரையறை செய்வதே நிரந்தர தீர்வாக அமையும். காவிரியில் மேகேதாட்டு அணை விவகாரத்தில் தனிமனித கருத்துக்கள் நடைமுறைக்கு வராது. இப்பிரச்னையில் கடந்த அதிமுக அரசு மௌனமாக இருந்து விட்டதால்தான் இப்போது இந்தளவுக்கு பிரச்சினை வளர்ந்திருக்கிறது’’ என்றார்.