1. Home
  2. தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய புத்தகம் வரும் 16-ம் தேதி வெளியீடு..!

1

 தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- சர்வாதிகாரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையே நடந்த போர்தான் 18-வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல். "400 இடங்களை கைப்பற்றுவோம்" என சொன்ன பா.ஜ.க.வை தனித்து அரசு அமைக்க முடியாத நிலைமையை உருவாக்கியது இன்டியா கூட்டணி. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நினைத்த பிரதமர் மோடியை, அண்ணல் அம்பேத்கர் அளித்த அரசியல் சாசன சட்டப்புத்தகத்திற்கு முன்னால் தலைகுனிந்து வணங்க வைத்திருக்கிறது தி.மு.க. அங்கம் வகிக்கும் இன்டியா கூட்டணி.

தமிழ்நாடு புதுச்சேரியில் நாற்பதுக்கு நாற்பது என்கிற வரலாற்று வெற்றியை தி.மு.க. கூட்டணி பெற்றது. அந்த சரித்திர சாதனையை ஆவணமாக பதிவு செய்கிறது முதல்வர், கழக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய "40/40 தென் திசையின் தீர்ப்பு புத்தகம்" இந்நூலினை சென்னை கலைஞர் அரங்கில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற உள்ள தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட, கழக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி. பெற்றுக் கொள்கிறார்.

2024 மக்களவைத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது வெற்றியை தி.மு.க. கூட்டணி எப்படி சாத்தியமாக்கியது?, முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்த தேர்தல் வியூகம், 2023-ல் இன்டியா  கூட்டணிக்கு விதை போட்ட சென்னை ஒய்.எம்.சி.ஏ.வில் நடந்த மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் நடந்த இன்டியா கூட்டணி கூட்டங்கள், தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு அளிக்கப்பட்ட பயிலரங்கம், கூட்டணிக் கட்சிகளுக்கிடையே நடந்த தொகுதி பங்கீடு, தி.மு.க. தேர்தல் அறிக்கை, கழக வேட்பாளர்கள் பற்றிய விவரங்கள், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற தேர்தல் பரப்புரை கூட்டங்கள், பல்வேறு ஊடகங்களுக்கு முதல்வர் அளித்த சிறப்பு பேட்டிகள், திமுகவின் தேர்தல் விளம்பரங்கள், 40/40 வெற்றியை தந்த தேர்தல் முடிவுகள், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வென்ற தேர்தல்கள், புள்ளி விவரங்கள், ஏராளமான படங்கள், இன்போகிராபிக் என விரிவாகப்பதிவு செய்திருக்கிறது 'தென் திசையின் தீர்ப்பு' நூல். 40/40 வரலாற்று சாதனை போல இந்த புத்தகமும் ஓர் வரலாற்று தேர்தல் ஆவணம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like