மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நாளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்..!
தமிழக அரசின் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்தார். மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்துக்காக ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ஒரு கோடியே 6 லட்சம் மகளிா் தோ்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் ரூ. 1,000 வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும், விண்ணப்பித்தவா்களில் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதுடன் அதற்கான காரணங்களும் தெரிவிக்கப்பட்டது. எனினும் தகுதியான நபர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அக்டோபர் 25-ம் தேதி வரை மகளிர் உரிமைத் திட்டத்திற்கு 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாகவும் அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நாளை வெள்ளிக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கிறார்.
உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்த 11.85 லட்சம் பேரில் தகுதியானவர்களுக்கு நாளை 10-ம் தேதி முதல் அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.