முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு... உதயநிதிக்கு புதுப் பொறுப்பு..!
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு ஏறத்தாழ இன்னும் இரண்டு வருடங்கள் உள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். இந்த சூழலில் 2026 தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு அமைத்து பணிகளை தற்போதே தொடங்கியுள்ளது திமுக.
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு தனது பணிகளை மிகச் சிறப்பாகச் செய்தது என்று சுட்டிக்காட்டினார்.
அதே வகையில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், “அதற்காக கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளை திமுக தலைவருக்கும், கட்சியின் தலைமைக்கு பரிந்துரைக்கவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
அனைத்து கட்சிகளையும் முந்திக்கொண்டு திமுக தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளது. திமுகவின் வெற்றியைத் தடுக்க அதிமுகவை வலுப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகள் கட்சிக்குள் முளைத்துள்ளன. அதன் ஒருகட்டமாக அணிகள் இணைப்பு குரல்கள் தீவிரமாக எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.