இளைஞர் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி..!

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல்துறை விசாரணையின் போது மரணம் அடைந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி முதல் அமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் . விசாரணைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இது யாராலும் நியாயப்படுத்த முடியாத செயல் எனவும் முதல் அமைச்சர் கூறியுள்ளார். காவல்துறையைச் சேர்ந்த 5 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், எந்த ஐயப்பாடும் எழுந்துவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் முதல் அமைச்சர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் முதல் அமைச்சர் முக ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது: "திருப்புவனம் இளைஞர் காவல் நிலைய மரண வழக்கில் #CBCID தனது விசாரணையைத் தொடரலாம் என்று மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்திருக்கிறது. இருந்தாலும், இந்த வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான ஐயப்பாடும் எழுப்பப்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை #CBI-க்கு மாற்றிடுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன். #CBI விசாரணைக்குத் தமிழ்நாடு அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்!" என்று பதிவிட்டுள்ளார்.