1. Home
  2. தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அமெரிக்கா பயணம்..!

1

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதும் மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு முக்கிய திட்டங்களை அறிவித்தும், அதனை திறம்பட செயல்படுத்தியும் வருகிறது. குறிப்பாக, 2030-ம் ஆண்டில் மாநிலத்தின் பொருளாதார மதிப்பு ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தும் இலக்கை முதல்வர் முன்னிறுத்தி அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் சென்று முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, உலக நாடுகளின் முன்னணி நிறுவனங்களை சந்தித்து சர்வதேச அளவில் தமிழகத்திற்கு முதலீட்டை கொண்டுவரும் வண்ணம், முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல திட்டமிடப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் அண்மையில் சென்னை தலைமைச்செயலகத்தில் அமெரிக்க துணை தூதர் கிறிஸ்டோபர் ஹாட்ஜஸ், முதல்வரை சந்தித்து பேசினார். 

இந்த நிலையில், இன்றுசென்னையில் இருந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். கிட்டத்தட்ட 17 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ள அவருக்கு அங்கு அமெரிக்க வாழ் தமிழர்களால் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும்  28-ம் தேதி முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை சான்பிரான்சிஸ்கோவில் உள்ள உலகின் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார். இதில், வரும்.29-ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் இன்வெஸ்டர் கான்கிளேவ்  முதலீட்டாளர்கள் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்று உரை நிகழ்த்துகிறார். மேலும், வரும் 31-ம் தேதி புலம் பெயர் தமிழர்களை சந்தித்து பேசுகிறார்.

இந்த நிகழ்வுகளை முடித்த பின்னர், செப்டம்பர் 2-ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிக்காகோ செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்று முதல் 10 நாட்களுக்கு அமெரிக்காவில் உள்ள பல்வேறு முக்கிய நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறார். குறிப்பாக, இதில், சர்வதேச அளவில் உள்ள ஃபார்ச்சூன் 500 நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகளை அவர் சந்தித்து பேசுகிறார். இதன் மூலம் உயர்தர வேலைவாய்ப்புகள் மற்றும் மாநிலத்தின் பொருளாதார மேம்பாட்டை உயர்த்தும் வகையில் இந்த பயணம் அமையும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த சந்திப்புகளுக்கு இடையே செப்டம்பர் 7-ம் தேதி வெளிநாடு வாழ் தமிழர்களுடனான நிகழ்ச்சியிலும் முதல்வர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக அனைத்து நிகழ்ச்சிகளையும் நிறைவு செய்து செப்டம்பர் 12-ம் தேதி அவர் சென்னை திரும்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இந்த பயணத்தின் போது முதல்வருடன் தலைமைச்செயலர் முருகானந்தம், நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அரசு துறை முக்கிய செயலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Trending News

Latest News

You May Like