1. Home
  2. தமிழ்நாடு

இன்று தருமபுரி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

1

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் போட்டியிடும் இன்டியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருகிறார். அதன்படி தர்மபுரி அருகே தடங்கம் கிராமத்தில் புதிய ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் செல்லும் சாலையில் உள்ள பி.எம்.பி. மைதானத்தில் இன்டியா கூட்டணி கட்சி சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர்  மு.க.ஸ்டாலின் இன்று சேலம் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் தர்மபுரி வருகிறார். பின்னர் அவர் தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் வக்கீல் ஆ.மணி, கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு பேசுகிறார். பின்னர் அவர் பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு கார் மூலம் மீண்டும் சேலம் செல்கிறார்.

தர்மபுரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கான மேடை மற்றும் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் அமருவதற்கான தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரவு நேரத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுவதால் இரவை பகலாக்கும் மின்விளக்குகள் அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கை வசதியும், பொதுமக்கள் வரும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டு உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ., கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஒய். பிரகாஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் செய்து வருகிறார்கள். முதல்வர்  மு.க.ஸ்டாலின் தர்மபுரி வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like