1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்..!

1

தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதி கோரி செப்டம்பர் 26, 27 ஆகிய நாட்களில் டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டு பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டுக்கான திட்டங்களை நிறைவேற்றிட மத்திய அரசு தர வேண்டிய நிதியை வலியுறுத்திப் பெறவிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே இன்று அதாவது 26-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்லவுள்ளார். நாளை பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்திற்கான கோரிக்கைகள் குறித்து பேசவுள்ளார்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ் வழங்க வேண்டிய நிதியை, மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. இந்த நிதியை உடனே விடுவிக்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசும் கோரிக்கை விடுத்துள்ளது. தேசிய கல்விக்கொள்கையை ஏற்று, பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே நிதியை விடுவிக்க முடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏற்கனவே, தெரிவித்திருந்தார். எனவே, மேற்கண்ட விவகாரங்களை தமிழக முதல்வர் பிரதமரிடம் நேரில் வலியுறுத்தலாம் என தெரிகிறது. அப்போது தமிழக நலன் சார்ந்த பல்வேறு அம்சங்கள் அடங்கிய கோரிக்கை மனுவையும் பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கி வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக, மத்திய அரசின் சமக்கிர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்காமல் உள்ளது. சமக்கிர சிக்ஷா அபியான் திட்ட நிதி, மெட்ரோ ரயில் திட்ட நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் வலியுறுத்துவார் என தெரிகிறது.

அதுமட்டுமல்ல, அமெரிக்காவில் இருந்து கடந்த 14-ம் தேதி சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், "மெட்ரோ ரயில் திட்ட நிதி தொடர்பாக பிரதமரை நிச்சயம் சந்திப்பேன். பள்ளிக்கல்வியில் புதிய கல்விக் கொள்கையை ஏற்பது குறித்து அமைச்சர்களை, அதிகாரிகள் சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து பிரதமரிடம் நேரம் கேட்டு, அவரை சந்தித்து வலியுறுத்த உள்ளேன்" என்று கூறியிருந்ததால், இது குறித்தும் பிரதமர் மோடியிடம் முதல்வர் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சமீபத்தில் மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி இல்லத்திற்கு சென்று ஸ்டாலின்அஞ்சலி செலுத்துவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

Trending News

Latest News

You May Like