வரும் 27-ம் தேதி பிரதமரை சந்திக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
அமெரிக்காவிலிருந்து கடந்த 14-ஆம் தேதி சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின், மெட்ரோ ரயில் திட்ட நிதி தொடர்பாக பிரதமரை சந்திக்க உள்ளதாக கூறியிருந்தார். இந்நிலையில் நிதி விவகாரம் தொடர்பாக பிரதமரிடம் நேரில் கோரிக்கை விடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி செல்கிறார். மெட்ரோ ரயில் திட்ட நிதி உள்ளிட்ட கோரிக்கைகள் சம்பந்தமாக பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 27-ம் தேதி நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளார்.
சென்னையில் மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கும்படி மத்திய அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நிதி ஒதுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதியையும் தமிழ்நாட்டிற்கு வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில்,பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 26-ஆம் தேதி இரவு டெல்லி செல்கிறார். அதற்கு மறுநாள் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார்.
அப்போது, மெட்ரோ ரயில் திட்ட நிதி, புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என்று தெரிகிறது. மேலும் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் நிலையில், அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் எனக் கூறப்படுகிறது.