இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி..!
திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது; தமிழகத்தின் ஐந்து முறை முதல்வராக - உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவரும், திராவிட இயக்கத்தின் போர்வாட்களில் ஒருவராகத் தமது பொதுவாழ்வைத் தொடங்கி, பின்னர், காஞ்சி தந்த காவியத் தலைவர் அறிஞர் அண்ணாவோடு திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்து பணியாற்றி, அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து, அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்து, தமிழக வரலாற்றில் தமக்கென்று சில பக்கங்களை ஒதுக்கிக்கொண்ட
முத்தமிழறிஞர் தமிழினத் தலைவர் கலைஞரின் 7வது நினைவுநாளினையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர், கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட கழக முன்னணியினர் கலந்து கொள்ளும் "அமைதிப் பேரணி", ஆகஸ்ட்-7, வியாழக்கிழமை அன்று காலை 7.00 மணிக்கு சென்னை, அண்ணா சாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் சிலை அருகிலிருந்து புறப்பட்டு, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சற்று நேரத்தில் சென்னையில், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கனிமொழி எம்.பி., அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தவுள்ளனர். நிறைவாக கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர்.
மேலும், அண்ணா சாலையிலிருந்து மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், அவரது நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , “எதிலும் தமிழ்நாடு முதலிடம்’ எனும் இலக்கை நோக்கி வெற்றிப் பாதையில் நடைபோடுவோம்” என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ”தலைவர் கலைஞர் – முத்துவேலரும் அஞ்சுகம் அம்மையாரும் பூமிக்குத் தந்த பிறப்பு. தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு. அவரது சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழ்நாட்டைக் காத்திட – முன்னேற்றிட உறுதியேற்று, கலைஞரின் ஒளியில் “எல்லார்க்கும் எல்லாம்” – “எதிலும் தமிழ்நாடு முதலிடம்” எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
.png)