தமிழகத்தில் எந்த அளவு மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியில் இன்று திங்கள்கிழமை (ஆக.5) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் துணை மின் நிலையம் மற்றும் சென்னை குடிநீர் வாரியத்தின் கழிவுநீர் வெளியேற்றும் நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து, சென்னை மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளியில் கூடுதல் கட்டிடம் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி மையம், ஜிகேஎம் காலனி 27-வது தெருவில் உள்ள சென்னை தெடாக்கப் பள்ளி மற்றும் 10 உயர் கோபுர மின் விளக்குகள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
தொடர்ந்து கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் சீனிவாச நகர் 3 வது பிரதான சாலையில் புதிய சென்னை தொடக்கப்பள்ளிக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் நேர்மை நகரில் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தில் சிஎம்டிஏ மூலம் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை பார்வையிட்டார். நீர்வளத்துறை ஆதாரத்துறையின் மூலம் தணிகாச்சலம் கால்வாயில் நடைபெறறு வரும் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து, பெரியார் நகர் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வரும் கூடுதல் கட்டிடப்பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது செய்தியாளர்கள் கேள்விகளுக்கு முதல்வர் பதிலளித்து பேசினார். சென்னையில் சிறிதளவு பெய்யும் மழைக்கே தண்ணீர் தேங்குவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகிறதே என்ற கேள்விக்கு, “சென்னையில் எங்கு தண்ணீர் தேங்குகிறது என்று ஒரு இடத்தையாவது எதிர்க்கட்சிகள் காட்ட வேண்டும். பருவமழைக்கு அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுத்து வருகிறோம். எப்பேர்பட்ட மழை வந்தாலும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது ” என்றார்.
தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க கோரிக்கை வலுத்து வருகிறதே என்று கேட்டபோது, “வலுத்துவருகிறதே தவிர பழுக்கவில்லை” என்றார்.