தமிழகத்திற்கு வழங்கப்பட்ட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து அமைச்சர்கள் வாழ்த்து..!

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, நவம்பர் 5 அன்று டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற உலக உணவு திருவிழா நிகழ்ச்சியில், பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டத்தில் சிறந்த செயல் திறனுக்காக ஜனாதிபதியால் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட விருதினை அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தா.மோ. அன்பரசன் ஆகியோர் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
உலகிற்கு இந்திய உணவு பாரம்பரியத்தை அறிமுகம் செய்திடவும் பல்வேறு உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளை இந்தியாவில் நிறுவிடும் பொருட்டும் உலக உணவு திருவிழா கடந்த 3, 4 மற்றும் 5 ஆகிய நாட்களில் டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள், அரசாங்கப் பிரதிநிதிகள், வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் இறுதி நாளான கடந்த 5-ம் தேதி அன்று, பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தில் சிறந்து செயல்பட்டு வரும் தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சிறந்த செயல் திறனுக்கான விருது ஜனாதிபதியால் வழங்கப்பட்டது.