குட் நியூஸ்..!இன்று பிற்பகல் 3 மணிக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள கபினி, கேஆர்எஸ் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து, உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து அதிகரித்து கொண்டே உள்ளது. அணைக்கு நீர்வரத்து இன்று காலை விநாடிக்கு சுமார் 1.42 லட்சம் கன அடியாக இருந்த நிலையில், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் மட்டம் இன்று காலை 105 அடியாக இருந்த நிலையில், தற்போது 107 அடியாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் மாலை 3 மணிக்கு டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் நீர் திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். முதற்கட்டமாக 12 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீர்வரத்தைப் பொறுத்து படிப்படியாக நீர் திறப்பு உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடி, ஆடிப்பெருக்கு விழாவை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுவதற்காக காவிரியில் நீர் திறக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏரி, குளங்களில் நீரை சேமித்து வைக்கவும், நிலத்தடி நீரை செறிவூட்டவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.