1. Home
  2. தமிழ்நாடு

தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவிக்கு பேனாவை பரிசளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

1

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருச்சி வருகை தந்தார். தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கல்லணையில் இருந்து டெல்டா பகுதிக்கு தண்ணீர் திறந்து வைத்தார். மேலும், அங்கு நடைபெற்ற கட்சி விழா மற்றும் பல்வேறு அரசு விழாவில் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்.

 

மீண்டும் விமானம் மூலம் சென்னை செல்வதற்காக நேற்று (ஜூன் 16) திருச்சி வருகை தந்தார். அப்போது, திருச்சி பெரிய மிளகு பாறையில் உள்ள அரசு ஆதி திராவிடர் நலப் பள்ளியில் பயின்ற மாணவி ராகிணி, தேசிய சட்டப் பல்கலைக்கழகத்திற்கான பொது நுழைவுத் தேர்வில் (CLAT) வெற்றி பெற்றுள்ளார். அவரை சந்தித்து, மாணவிக்கு சால்வை அணிவித்து சிறப்பித்து தனது பேனாவை பரிசாக வழங்கினார்.

 

இது குறித்து அரசு பள்ளி மாணவி ராகிணி கூறுகையில், நான் முதல்வன் திட்டம் மூலமாக பயிற்சி பெற்று, சட்டம் படிக்க பொதுச்சட்ட சேர்க்கைத் (CLAT) தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். இதற்கு உறுதுணையாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள் ஆகியோருக்கு நன்றி. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தது மகிழ்ச்சியாக உள்ளது” என மாணவி தெரிவித்தார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், “ தஞ்சையிலிருந்து திருச்சி செல்லும் வழியில், அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் பயின்று, கிளாட் தேர்வில் தேர்ச்சி பெற்று, சட்டம் பயிலச் செல்லும் மாணவி ராகிணியைச் சந்தித்து வாழ்த்தினேன். சாதனைகள் பல படைத்திடும் நமது திட்டங்களுக்குக் கையெழுத்திட்ட எனது பேனாவை, சாதனைகள் பல படைத்திட வேண்டும் என வாழ்த்தி ராகிணிக்குப் பரிசளித்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில், சக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள், மாணவ , மாணவிகள் CLAT தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ராகிணிக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.

Trending News

Latest News

You May Like