தமிழ்நாட்டை கஞ்சா நாடு, போதை நாடு என பெயர் மாற்றலாம் : அன்புமணி ராமதாஸ் ஆவேசம்..!

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், ஒருங்கிணைந்த திருப்பத்தூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர், கட்சி தொடங்கி 36 ஆண்டுகள் ஆகிறது, முக்கியமான கட்டத்தில் இந்த பொதுக்குழு கூட்டம் நடைப்பெறுகிறது, தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கிய மக்களுக்கும் சமூக நீதி தேவை என்பதற்காக இந்த கட்சியை தொடங்கினோம். கடந்த மாதம் நடத்திய மாநாட்டை பார்த்து எதிர்கட்சிகளும், மற்றகட்சிகளும், பொறாமையில் அஞ்சுகின்றனர். எப்படி மாநாட்டிற்கு சேர்ந்தார்கள் என்று, நமது மாநாட்டை நடத்தக்கூடாது என பல வழக்குகள் தொடர்ந்தார்கள்.
எவ்வளவு தடை ஏற்படுத்தினார்கள், அதனை உடைந்தெறிந்து மாநாட்டை நடத்தினோம். எவ்வளவு காலம் தான் நாம் அவர்களிடம் கேட்போம், நாமும் ஆளவேண்டும், வன்னியர்களுக்கு தரவுகளை சேகரித்து உள்ஒதுக்கீடு அளிக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் நாங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கு அனைத்தும் கிடைக்க வேண்டும் என கணக்கெடுப்பு நடத்த சொல்கிறோம். இது குறித்து பலமுறை நானும் ஐயாவும் ஸ்டாலினை சந்தித்து மனு அளித்தோம், அவர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தனியாகவே சட்டமன்ற கூட்டத்தொடர் நடத்துவேன் என கூறினார். ஆனால் கடைசி நிமிடத்தில் கழுத்தறுத்து தமிழ்நாட்டிற்கு அந்த அதிகாரம் இல்லை, மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கூறுகிறார்.
பல்வேறு மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு அளித்து வருகின்றனர், ஆனால் ஸ்டாலின் நம்முடைய மாநாட்டை பார்த்து வன்னியர்களுக்கு துரோகம் செய்ய நேரடியாக களத்தில் சந்திக்க முடியாமல் சூழ்ச்சி செய்து வீழ்த்த நினைக்கிறார்கள். இன்னும் 8 மாதத்தில் கொடுங்கோல் திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும், வீதி வீதியாக போதைப்பொருட்கள் விற்பனை செய்கிறார்கள், பெண்கள், வியாபாரிகள் என அனைவரும் ஆத்திரத்தில் இருக்கின்றனர். ஜூலை 25 ஆம் தேதி தமிழக மக்களின் உரிமை மீட்பு பயணம் சென்னையில் தொடங்கி தமிழகம் முழுவதும் மேற்க்கொள்ள இருக்கின்றேன். மேலும் கல்லணையில் திறந்து விடுவது, அதிகாரிகளின் வேலை, அதை முதலமைச்சர் செய்கிறார், முதலமைச்சரின் வேலை தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை சரியில்லை.
பாமக நிர்வாகியை திட்டமிட்டு துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர், தமிழகத்தில் துப்பாக்கி கலச்சாரம் எப்படி வந்தது, இதை விட்டு விட்டு பெண்களை செட் செய்து ரோட் ஷோ செய்து பெண்களிடம் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என கேட்கிறார், தமிழ்நாட்டில் யாரும் மகிழ்ச்சியாக இல்லை, எங்களுக்கு சமூக நீதி வேண்டும் ஆயிரம் ரூபாய் வேண்டாம், அதை கொடுக்க துப்பில்லை எனவும் மேலும் தமிழ்நாட்டை, குடிகார நாடு, போதை நாடு, கஞ்சா நாடு, என மாற்றலாம் என ஆவேசமாக பேசினார். அதனை தொடர்ந்து இந்த பொதுக்குழு கூட்டத்தில், 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, மேலும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக பொருளாளர் திலகபாமா மற்றும் பாமக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் பங்கேற்றனர்.