இன்று காலை 10.30 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம்..!
இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு தொடங்கும் அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட உள்ளன. அதேபோல் புதிய தொழில் முதலீடு திட்டங்களுக்கு இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் செப்டம்பர் முதல் வாரத்திலேயே முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் ஸ்டாலின், பல்வேறு புதிய முதலீடுகளுக்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளார். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே முதலீடுகள் ஈர்க்கப்பட்டு புதிதாக தொழில் தொடங்க முனையும் நிறுவனங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.
புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி, புதிய திட்டங்கள், தொழில் விரிவாக்கங்களுக்கு அனுமதி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன. அதேபோல் தமிழ்நாட்டில் ஆணவக் கொலையை தடுப்பதற்கு தனிச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் உள்ளிட்ட 3 கூட்டணிக் கட்சிகளும் நேரில் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைத்திருந்தன.
இதனால் ஆணவக் கொலை தொடர்பான புதியச் சட்டம் இயற்றுவது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.