விரைவில் மாற்றி அமைக்கப்படும் தமிழக அமைச்சரவை..! துணை முதல்வராகிறார் உதயநிதி ஸ்டாலின்?
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மகனும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று முதலீடுகளை ஈர்த்து வருகிறார். ஏற்கனவே ஐக்கிய அமீரகம், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்த்து இருக்கிறார். அடுத்த கட்டமாக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளார். முதலில் இம்மாதம் 22ம் தேதி அவர் அமெரிக்காவுக்குச் செல்ல உள்ளதாகக் கூறப்பட்டது. இருப்பினும், சில காரணங்களால் அந்த பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின கொண்டாட்டத்தை எல்லாம் முடித்துவிட்டு அடுத்த மாதம் அமெரிக்காவுக்குச் செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஆகஸ்ட் 22ம் தேதி முதல்வரின் அமெரிக்கா பயணம் அமையலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே அதற்கு முன்பாக அமைச்சரவையில் மிகப் பெரிய மாற்றம் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் பல முக்கிய அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அமைச்சரவையில் இருக்கும் பலர் மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை இருக்கும் நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப் பெரிய அமைச்சரவை மாற்றத்தை முதல்வர் ஸ்டாலின் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், போக்குவரத்துத் துறை, மின்சார துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் மாற்றங்கள் வரலாம் எனச் சொல்லப்படுகிறது. இந்த அமைச்சரவையில் மேலும் சில புதிய முகங்களுக்கும் வாய்ப்பு தரப்படலாம் எனச் சொல்லப்படுகிறது. குறிப்பாக சில இளம் எம்எல்ஏக்கள் அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.
.png)