வரும் பிப்ரவரி 19-ல் தமிழக பட்ஜெட் தாக்கல்..!
2024-ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் பிப்ரவரி 12-ம் தேதி தொடங்குகிறது. 19-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 20-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரை கவர்னர் முறையாக முடித்து வைக்கவில்லை. மேலும் கவர்னருக்கும் தமிழக அரசிற்கும் இடையே மோதல் போக்கு அதிகமாகியுள்ளது. எனவே இந்த கூட்டத்தொடர் கவர்னரின் உரையுடன் தொடங்கப்படுமா? என்பது மிகப்பெரிய கேள்வி எழுந்த நிலையில அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்கும் என்று தமிழக சட்டப்பேரவையின் தலைவர் அப்பாவு அறிவுத்துள்ளார்.
இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் அவைத் தலைவர் அப்பாவு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது, சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள பேரவை மண்டபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நடப்பாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் பிப்ரவரி 12-ம் தேதி தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நடைபெறும் பட்ஜெட் தாக்கல் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் கூறினார். பிப்.20ல் முன்பண மானிய கோரிக்கையும், 21ல் முன் பணச் செலவு கோரிக்கையும் விவாதிக்கப்படுகிறது.