எச்.ராஜா தலைமையில் தமிழக பாஜக-வில் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு..!
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் பற்றி படிப்பதற்காக லண்டன் சென்றுள்ள அண்ணாமலை அங்கேயே 4-5 மாதங்கள் தங்கவுள்ளார். ஏற்கனவே அதிமுக - பாஜக மோதல், பாஜக உட்கட்சி பூசல் காரணமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.
அதேபோல் தற்காலிக தலைவர் கொண்டு வரப்படலாம் என்று செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக சமீபத்தில் அவரிடமே செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, கட்சி தலைமைதான் முடிவுகளை எடுக்கும். கட்சியின் வளர்ச்சிக்காகவே தாங்கள் செயல்படுவதாகவும் கூறினார். கட்சித் தலைவர் சுமார் 6 மாதங்கள் இல்லாத நிலையில், கட்சிப் பணிகள் எவ்வாறு நடைபெறும் என கேள்வியெழுந்தது.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இங்கிலாந்து சென்ற நிலையில், அவரது பணிகளை கவனிக்க ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. எச்.ராஜா ஒருங்கிணைப்பாளராகவும், சக்கரவர்த்தி கனகசபாபதி, முருகானந்தம், ராம சீனிவாசன், எஸ். ஆர்.சேகர் உள்ளிட்ட 6 பேரும் மாநில மையக்குழு உடன் ஆலோசித்து கட்சிப் பணிகளை கவனிக்க ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.