தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீண்டும் டெல்லி பயணம்..! தலைவர் பொறுப்பில் மாற்றமா..?

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போதும் 2021 சட்டமன்றத் தேர்தலின்போதும் இரு கட்சிகளுக்கு இடையில் இருந்த கூட்டணி, அண்ணாமலை முன்வைத்த கருத்துகளால்தான் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு, அதிமுக-வும் பாஜகவும் தனித்தனியாகச் சந்தித்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. வரும் சட்டமன்றத் தேர்தலிலும் இதே நிலை எதிரொலிக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு மீண்டும் அதிமுக-பாஜக இணைய வேண்டும் என அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க பாஜக தலைமை காய்களை நகர்த்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.
இந்தச் சூழலில்தான், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லிக்குத் திடீர் விஜயம் செய்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இந்தச் சந்திப்பு அரசியல் ரீதியானதல்ல என்று ஈபிஎஸ் தெரிவித்த போதும், அது அரசியல் ரீதியான சந்திப்பு என்பதைப் போலவே அமித் ஷா பேசி வருகிறார். அதிமுகவுடனான கூட்டணியை முறித்தது, அதிமுக தலைவர்களைச் சாடியது போன்றவற்றால் அண்ணாமலை மீது அதிருப்தியில் இருப்பதால் அவரைப் பதவியில் இருந்து நீக்க அமித் ஷாவைடம் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. கூட்டணி பேச்சுவார்த்தையிலும் பாஜக மூத்த தலைவர்களான பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன்பட்ட போதும், அண்ணாமலை மட்டும் மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது.
இதனால் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்தித்த அடுத்த சில நாட்களில் அண்ணாமலையும் டெல்லிக்கு அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு ஞாயிறன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பா.ஜ.கவின் தொண்டனாகப் பணியாற்றவும் தான் தயார் என கட்சித் தலைமையிடம் கூறியிருப்பதாகப் பேசினார். இதனால், அதிமுகவுக்காக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மாற்றப்படுகிறாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில், தமிழ்நாடு பாஜகவிற்குப் புதிய தலைவரை நியமிப்பது குறித்து வரும் 7ஆம் தேதி அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், வரும் 6ஆம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட முக்கிய நிர்வாகிகள் சந்திப்பார்கள் எனப் பேசப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அல்லது வானதி சீனிவாசனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படி, அதிமுக கூட்டணி விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து பாஜகவில் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பி உள்ள நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை மீண்டும் டெல்லி செல்லத் திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே பாஜக மூத்த தலைவர்களைச் சந்தித்த அண்ணாமலை மீண்டும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அண்ணாமலை மீண்டும் டெல்லி சென்று தற்பொழுது தமிழ்நாடு அரசியல் சூழல் குறித்தும் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து விவரிக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.