1. Home
  2. தமிழ்நாடு

இரா.சம்பந்தன் இறுதிச் சடங்கில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அஞ்சலி!

Q

இலங்கையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும், திரிகோணமலை மாவட்ட எம்.பி.யாகவும் இருந்த இரா.சம்பந்தன் வயதுமூப்பு காரணமாக கடந்த ஜுன் 30-ம் தேதி இரவு காலமானார்.
கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு பொரளையில் உள்ள மலர் சாலையில், பொதுமக்கள் அஞ்சலிக்காக அவருடைய உடல் வைக்கப்பட்டிருந்தது. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவரதுஉடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கடந்த புதன்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், கொழும்புவிலிருந்து விமானம் மூலம் யாழ்ப்பாணத்துக்கு இரா.சம்பந்தனின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, தந்தை செல்வாஅரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அடுத்த நாள் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திலிருந்து, திருகோணமலைக்கு விமானம் மூலமாக அவரது உடல் கொண்டு வரப்பட்டது.
திருகோணமலையில் வெள்ளி, சனிக்கிழமைகளில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இலங்கை வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் பெருந்திரளாக அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
நேற்று பிற்பகல் திருகோணமலை தபால் கந்தோர் தெருவில் உள்ள அவரது பூர்வீக வீட்டில் இறுதிச் சடங்குகள் நடந்தன. அங்கிருந்து இரா.சம்பந்தனின் உடல் மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் இலங்கையின் வடக்கு, கிழக்கு, தெற்கு, மத்திய மாகாணங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், மலையக மற்றும் சிங்கள கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Trending News

Latest News

You May Like