நாளை கூடுகிறது தமிழக சட்டசபை கூட்டத்தொடர்..!
சட்டசபையின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் தொடங்கும். கடந்த ஆண்டு சட்டசபை முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது, தமிழ்நாடு அரசு தயாரித்து அளித்த உரையில் சிலவற்றை தவிர்த்தும், சிலவற்றை சேர்த்தும் வாசித்தார்.
இதனால், கவர்னர் இருக்கும் போதே, அவருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் முன்மொழியப்பட்டது. அப்போது, கவர்னர் அவையில் இருந்து வெளியேறிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கெனவே, பல்வேறு நிகழ்ச்சிகளில் கவர்னர் தெரிவித்த கருத்துகளால், அரசுக்கும், கவர்னருக்கும் இடையே நிலவிய பனிப்போர் மேலும் தீவிரமடைந்த நிலையில், கடந்த ஆண்டு சட்டசபை கூட்டத்தையும் கவர்னர் முடித்து வைக்காமல் இருந்தார்.
இந்தநிலையில் 2024-ம் ஆண்டுக்கான சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கவர்னர் ஆர்.என்.ரவியின் உரையுடன் வரும் 12-ம் தேதி (நாளை) தொடங்க உள்ளது. தொடர்ந்து 19-ம் தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். இதையடுத்து 20-ம் தேதி முன்பண மானியக் கோரிக்கையும், 21-ம் தேதி முன்பணச் செலவின மானியக் கோரிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளது. சட்டசபை கூட்டத்தொடரை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சட்டப் பேரவை நிகழ்வுகளை ஒளிபரப்புவதற்காக வைக்கப்பட்டுள்ள திரையின் அகலம் இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேரவைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர். 50 அங்குலம் அளவில் இருந்த திரைகளின் அகலம், இப்போது கூடுதலாக்கப்பட்டுள்ளது.