1. Home
  2. தமிழ்நாடு

இனி விமான நிலையங்களில் தமிழ் மொழியில் அறிவிப்பு..?

1

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கனகராஜ் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், “தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளுக்கு தமிழ் தாய் மொழியாகும். மேலும், உலகளவில் சமஸ்கிருதம், கிரீக் மற்றும் லத்தின் மொழிகளுக்கு முன் தோன்றிய மொழியாகும். தமிழில் உள்ள இலக்கண, இலக்கியங்கள் போல எந்த மொழியிலும் இல்லை.

மனிதன் உருவாகிய காலம் முதல் தமிழ் இருந்து வருவதாக கூறப்படுகிறது. சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மொழி தோன்றியிருக்கலாம் என ஆய்வுகள் கூறுகிறது. உலக பொதுமறையாம் திருக்குறள் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது. கடவுள் சிவனும், முருகனும் தமிழின் ஆசிரியர்களாக மதிக்கப்படுகின்றனர்.

சேர, சோழ, பாண்டியர்கள் காலத்தில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்துள்ளனர். தமிழை அரசு மொழியாக 1969ஆம் ஆண்டு அரசு அறிவித்தது. 1967ஆம் ஆண்டு முதல் தமிழ் வளர்ச்சித்துறை செயல்பட்டு வருகிறது. ஆனால், தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழ் வளர்ச்சிக்கு திட்டங்கள் கொண்டு வந்தாலும் நடைமுறைப்படுத்துவதில்லை. ஆங்கிலத்தில் தான் அரசின் அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. அதனால், தமிழை ஆரம்பக் கல்வி முதல் பட்டப்படிப்பு வரை பயில முன்னுரிமை அளிக்க வேண்டும். சென்னையில் தமிழ் பல்கலைக்கழகம் ஏற்படுத்த வேண்டும். விமான நிலையங்களில் தமிழில் அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இலங்கை, மலேசியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் கூட விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வழங்கப்படும் நிலையில், இந்தியாவில் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வழங்குவதில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வழங்கக்கோரி மனுதாரர் அறக்கட்டளை அளித்த விண்ணப்பத்தை 12 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Trending News

Latest News

You May Like