தமிழ் சினிமா பிரபலம் கார் விபத்தில் மரணம்..!

‘ஒத்த வீடு’ ’ஆடவர்’ ’சாதனை பயணம்’ போன்ற தமிழ் படங்களுக்கும் ஏராளமான மலையாள படங்களுக்கும் இசை அமைத்து உள்ளார் இசையமைப்பாளர் தஷி என்ற சிவகுமார். தனது தந்தையுடன் ஸ்டுடியோக்களுக்கு சென்று வந்த சிவகுமாருக்கு திரையுலகில் ஈர்ப்பு வந்தது. அதனையடுத்து திரையுலகில் பின்னணி இசைப்பிரிவில் முதலாக பணிக்கு சேர்ந்து சிறிது சிறிதாக முன்னேறினார்.
மலையாளப் படங்களில் பணியாற்றிய போது குட்டி கிருஷ்ணன் என்ற தயாரிப்பு நிர்வாகி அறிமுகமானார். அவரது பரிந்துரையில் சிவகுமாருக்கு ஒரு படத்துக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. தந்த்ரா என்ற அந்த படத்தின் பின்னணி இசைக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது மலையாள திரை உலகில் அவருக்கு கிடைத்தது. திரை உலகத்திற்காக தனது பெயரை வீ.தஷி என்று மாற்றிக் கொண்டார்.
அச்சன்டே பொன்னுமக்கள், மோகன்லால் நடித்த பகவான், கோபாலபுரம், வெள்ளியங்காடி, குண்டாஸ், டர்னிங் பாய்ண்ட் என 60க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இதுவரை 2400 பக்தி ஆல்பங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
கருவறை, தீ விலங்கு, பயணங்கள் தொடரும், காதல் தோழி, சங்கர் ஊர் ராஜபாளையம், சக்ரவர்த்தி திருமகன், ஒத்த வீடு, என் பெயர் குமாரசாமி, ஒளடதம், அலையாத்தி காடு, அஸ்திரம், பாதசாரிகள், கல் பாலம், நுகம், பயம், நீதான் ராஜா, படை சூழ வா, நானாக நானில்லை, அபூர்வ மகான் உள்ளிட்டவை தஷி இசை அமைத்த தமிழ் படங்கள் ஆகும்.
நேற்று மதியம் தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்த தஷி கோவை அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். 49 வயதான அவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு மகன்களும் உள்ளனர்.திருப்பூர் மாவட்டம் பழங்கரை பகுதி அருகே வந்து கொண்டிருந்த போது காரின் முன்பக்க டயர் திடீரென்று வெடித்தது. இதில் நிலை தடுமாறிய கார் சாலையின் பக்கவாட்டில் இருந்த சுவற்றில் மோதி விபத்து ஏற்பட்டது.
கேரள அரசின் சிறந்த பின்னணி இசை அமைப்பாளருக்கான விருது பெற்ற இசையமைப்பாளர் வீ.தஷி சாலை விபத்தில் மரணமடைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.