இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க..! தமிழகம் முழுவதும் வரும் 23-ம் தேதி கிராம சபை கூட்டம்..!
அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில்,
கிராம சபை கூட்டத்தை ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் வரும் 23-ம் தேதி காலை 11 மணியளவில் நடத்த வேண்டும் என்றும், கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க ஏதுவாக, கூட்டம் நடைபெறும் இடம், நேரத்தை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கையில், தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், அனைத்து கிராம மக்களும் ஆர்வத்துடன் எதிர்வரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள எதுவாக கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ள இடம். நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
கிராம சபைக் கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடந்திடக் கூடாது. கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே ஊரகப் பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும்.
மேலும், வரும் 23-ம் தேதி அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை எடுத்திடவும். கூட்ட நிகழ்வுகளை நம்ம கிராம சபை செயலி மூலம் உள்ளீடு செய்திட வேண்டும் எனவும், அது குறித்த அறிக்கையை வரும் 23-ம் தேதி அன்றே இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.