தைவான் நிலநடுக்கம்: இந்தியர்களுக்கு உதவி எண் அறிவிப்பு..!
தைவான் நாட்டின் தலைநகரான தைபேவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தைபேவின் கிழக்கு பகுதியான ஹுவாலியனில் பல கட்டிடங்கள் இந்த நிலநடுக்கத்தால் குலுங்கின. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானதாகவும், சுமார் 35 கி.மீ. ஆழத்தில் பதிவானதாகவும் அந்நாட்டின் வானிலை ஆய்வு மைய அமைப்பு தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து தைபேவின் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஹுவாலியனில் பல கட்டிடங்கள் சரிந்து விழுந்துள்ளன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். 1 மணி நேரத்திற்குள்ளாக 11 முறை நில-அதிர்வு உணரப்பட்டுள்ளது.
தைவானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், ஜப்பான் நாட்டின் கடலோரத்தில் அலைகள் உயரமாக எழும்பத் தொடங்கியுள்ளன. மியாகோ, யேயாமா தீவுகளிலும் அலைகள் உயரே எழுந்து காணப்படுகிறது. இதன் காரணமாக ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஃபிலிப்பைன்ஸிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தைபேவில் வசிக்கும் இந்தியர்களின் உதவிக்காக அவசர உதவி எண்ணை இந்தியா தைபே சங்கம் வெளியிட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் இந்தியர்கள் 0905247906 என்ற எண்ணுக்கு அல்லது ad.ita@mea.gov.in என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தியர்கள் அனைவரும் உள்ளூர் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை கவனித்து பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.