பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த தடா பெரியசாமி..!
பாஜகவில் பட்டியல் அணி மாநிலத் தலைவராக இருந்த தடா பெரியசாமி, தற்போது அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு பாஜகவில் விருப்ப மனு அளித்த நிலையில் அவருக்கு சீட் கிடைக்கவில்லை என்பதால் அதிருப்தியில் இருந்து வந்த தடா பெரியசாமி, தற்போது அக்கட்சியிலிருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார். இவர் இன்று காலை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்றார். அங்கு அவரை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் இணைந்தது குறித்து தடா பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்த போது கூறியயதாவது:-
சிதம்பரம் தொகுதி என்னுடைய தொகுதி. அங்கு சம்பந்தமே இல்லாமல் வேலூரில் இருந்து ஒரு பெண்ணை (கார்த்திகாயினி) வேட்பாளராக நிறுத்தியுள்ளார்கள். பட்டியல் அணி மாநிலத் தலைவராக உள்ள என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. இதற்கெல்லாம் காரணம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல் முருகன், அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம். இவர்கள் 3 பேர்தான் கட்சியா? பட்டியலினத் தலைவருக்கே மரியாதை இல்லை என்றால், இவர்கள் பட்டியலின மக்களுக்கு எப்படி மரியாதை கொடுப்பார்கள்.
இதுகுறித்து அண்ணாமலையிடம் முறையிட்டேன். அதற்கு அவர் “கட்சி எடுத்த முடிவு” என சொல்லிவிட்டார். தற்போது அதிமுகவில் இணைந்தேன். எடப்பாடியாரின் கரங்களை வலுப்படுத்த இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்வேன். குறிப்பாக சிதம்பரம் தொகுதியில் பிரச்சாரம் செய்யவுள்ளேன். வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சி அமைய நிச்சயம் பாடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
அரியலூரில் பிறந்தவர் தடா பெரியசாமி. இவர் பட்டியலின மக்கள் மீதான கொடுமைகளுக்கு எதிராக போராடியவர். 1990 ஆம் ஆண்டு திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார். அங்கு 2001 ஆம் ஆண்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு அக்கட்சியிலிருந்து விலகி கடந்த 2004 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அந்த ஆண்டு நடந்த சிதம்பரம் லோக்சபா தொகுதியிலும் 2006ஆம் ஆண்டு நடந்த வரகூர் சட்டசபை தொகுதியிலும் அவர் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 1992 ஆம் ஆண்டு திருச்சியில் லால்குடியை அடுத்த கல்லக்குடி பழங்கானத்தம்- கலக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இது தொடர்பாக பெரியசாமி உள்ளிட்டோர் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். 2010 இல் பஞ்சமி நில மீட்பு இயக்கத்தையும் தொடங்கி நடத்தி வந்தார் தடா பெரியசாமி.