தி.நகர் நகை கொள்ளை… இரண்டு மாவட்ட போலீஸார் மோதல்!

சென்னை தி.நகர் கொள்ளை வழக்கில் இரு மாவட்ட போலீசாருக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காவல்துறை வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
தி.நகர் மூசா தெருவில் உத்தம் ஜுவல்லரி நகைக்கடையில் கடந்த 21ஆம் தேதி அதிகாலை நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் ரூ. 2 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை திருடப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக தி.நகர் துணை ஆணையர் ஹரிகரன் மேற்பார்வையில் மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
விசாரணை நடத்தியதில் கொள்ளையர்களில் ஒருவர் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ் என்கிற மார்க்கெட் சுரேஷ், என்பதும் மற்றொருவர் கூட்டாளி அப்புனு வெங்கடேசன் என்பதும் தெரியவந்தது. கொள்ளையடித்த நகைகளை திருவள்ளூரில் உள்ள தனது காதலி கங்காவிடம் சுரேஷ் கொடுத்ததை அடுத்து, தனிப்படை போலீஸார் கங்காவை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
இந்நிலையில் கங்காவை பார்க்க சுரேஷ் திருவள்ளூருக்கு சென்ற போது, திருவள்ளூர் டிஎஸ்பி துரைப்பாண்டியன் அவரை கைது செய்து விசாரணை நடத்தினார். இதற்கிடையில் கங்கா கொடுத்த தகவலின் படி சுரேஷை தங்களிடம் ஒப்படைக்குமாறு மாம்பல போலீசார், திருவள்ளூர் போலீசாருக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் கங்காவை கைது செய்தபோது மாம்பலம் போலீசார் தங்களுக்கு தகவல் தெரிவிக்காததால், இதற்கு திருவள்ளூர் போலீசார் மறுப்புத் தெரிவித்ததாகத் தெரிகிறது.
இதனைத்தொடர்ந்து சுரேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய திருவள்ளூர் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். இரு மாவட்ட போலீசாருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை கேள்விப்பட்ட தலைமை இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியது.இந்தப் பேச்சுவார்த்தைக்கு பிறகு தி நகரில் சுரேஷ் கொள்ளையடித்த 21 சவரன் தங்கம் மற்றும் 7 கிலோ வெள்ளி நகைகளை மாம்பலம் போலீசாரிடம் திருவள்ளூர் மாவட்ட போலீசார் ஒப்படைத்துள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொள்ளையன் சுரேஷை போலீஸ் காவலில் எடுத்து சென்னை கொண்டுவர மாம்பலம் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனிடையே செங்கல்பட்டில் பதுங்கியிருந்த வெங்கடேசனையும் மாம்பலம் போலீசார் கைது செய்தனர்.
newstm.in