ஸ்வீட் நியூஸ்..! நாளை பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்படும் – அதிரடி உத்தரவு!
தமிழக முதல்வராக சிறப்பாக ஆட்சி செய்தவர் திரு.மு.க.கருணாநிதி. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்க சமூக நல ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் பிறந்தநாள் அன்று வழங்கப்படுவதை போலவே மு.க.கருணாநிதி அவர்களின் பிறந்த நாளுக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று இனிப்பு பொங்கல் வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு மே மாதம் வெளியிட்டது. தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாள் அன்று இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல கருணாநிதி பிறந்த நாளன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் ஜூன் மூன்றாம் தேதி கோடை விடுமுறையில் சென்றதால், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளான ஜூன் 10 ஆம் தேதி அன்று அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்க சமூக நல ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் அன்றைய நாளில், அனைத்து வகை அரசு, அரசு உதவி பெறும், பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளில் நிதி உதவி பெறும் வகுப்புகள் மற்றும் சுயநிதிப் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் தமிழ் வழியில் இயங்கும் வகுப்புகள் ஆகியவற்றில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்குப் பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம், புவியியல் வரைபடம் ஆகிய நலத்திட்டப் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுளது. மேலும் அதைத்தொடர்ந்து, புத்தகப்பை. காலணிகள், காலேந்திகள் மற்றும் கம்பளிச்சட்டை மழைக்கோட்டு, பூட்ஸ், காலுறைகள், வண்ணப் பென்சில்கள், வண்ணக் கிரையான்கள், மிதிவண்டிகள், கணித உபகரணப் பெட்டிகள் ஆகிய நலத்திட்டப் பொருட்களும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ளது.