சூரப்பா தான் முதல்வர் வேட்பாளர்! போராட்டம் நடத்தும் உதயநிதி ஸ்டாலின்!
தமிழகத்தில் அதிமுகவின் உண்மையான முதல்வர் வேட்பாளர் அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா தான் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை நீக்க கோரி வலியுறுத்தி தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில், சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் சர்தார் பட்டேல் சாலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நமது வீட்டு பிள்ளைகளை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க கூடாது என்று ஒரு கும்பல் முயற்சி செய்து வருகிறது.
இஸ்ரோவில் வேலை செய்பவர்களை அனுப்ப கூடிய அளவில் அண்ணா பல்கலைக்கழகம் செயல்படுகிறது. அப்படி இருக்கும் போது போது எதற்காக சிறப்பு அந்தஸ்து.
மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கினால் பொறியியல் படிப்பதற்கு மாணவர்கள் வருடத்துக்கு 2 லட்சம் தேவைப்படும். இந்த திட்டத்தை கைவிடா விட்டால் போராட்டம் தொடரும் என்றும், இங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினால் போலீசார் கைது செய்வார்கள் என்று சொன்னார்கள். கைதுக்கு அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல என தெரிவித்தார்.
மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தை அதிமுக அரசு, மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டார்கள் என்றும், தமிழகத்தில் முதல்வர் வேட்பாளராக சூரப்பா நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் அவர் கேலியும் கிண்டலுமாக குறிப்பிட்டார்.