1. Home
  2. தமிழ்நாடு

பதஞ்சலி நிறுவன வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி..!

1

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய மருத்துவ கூட்டமைப்பு(ஐஎம்ஏ) சார்பில் பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அதில் “ பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனம் தவறாந தகவல்களை வழங்கியும், மக்களுக்கு தவறான தகவல்களை அளித்தும், மருந்துகள் தொடர்பான விளம்பரங்களை வெளியிடுகிறது. மேலும் அலோபதி மருத்துவர்கள் குறித்தும் தவறான தகவல்களை அளித்து பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் செய்தது,

மருத்துவர்களையும் தவறாகச் சித்தரித்தது. ஆயுர்வேதா பொருட்கள் உற்பத்தியை பெருக்கவும் விற்பனையை அதிகரிக்கவும் தவறான அறிக்கைகளை பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டு மக்களை தவறாக வழிநடத்தியது” எனத் தெரிவித்தது.

இதையடுத்து, கடந்த பிப்ரவரி 27ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், “ பதஞ்சலி நிறுவனம் சார்பில் மருந்துகள், மாத்திரைகள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அனைத்து நாளேடு, தொலைக்காட்சி விளம்பரங்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் உத்தரவுக்குப்பின்பும் அந்த விளம்பரங்களை பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனம் நிறுத்தவில்லை. இதையடுத்து, இந்திய மருத்துவக் கூட்டமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பாபா ராம்தேவ், பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, அசானுதீன் அமானுல்லா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனத்தின் இயக்குநர் பாலகிருஷ்ணன், யோகா குரு சாமியார் பாபா ராம்தேவ் ஆகியோர் நேரில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

அப்போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தாங்கள் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுக்கு பணிந்து நடக்காத பாலகிருஷ்ணன், ராம்தேவை கடுமையாக கடிந்து கொண்டனர் அது மட்டுமல்லாமல் நாங்கள் எடுக்கும் நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என்று எச்சரித்தனர்.

அது மட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றம் உத்தரவை மதிக்காமல், பதஞ்சலி நிறுவனம் தொடர்ந்து விளம்பரம் செய்தனர். அவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு, நீதிமன்ற உத்தரவுகளை மதித்து கட்டுப்பட்டு செயல்பட்டு இருக்க வேண்டும். என்று கடுமையாகப் பேசினர்.

ஆனால், ராம்தேவ், பாலகிருஷ்ணன் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் நீதிபதிகளிடம், “ ராம்தேவ், பாலகிருஷ்ணன் இருவரும் நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கேட்க விரும்புகிறார்கள். நீதிமன்றம் என்ன உத்தவிட்டாலு் ம் அதை நிறைவேற்றவும் தயாராக இருக்கிறார்கள்” என இரு கரங்களையும் கட்டிக்கொண்டு தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், “உங்கள் மன்னிப்பால் எங்களுக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை. மருந்துகள் குறித்து தவறான தகவல்களை அளித்து விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

மத்திய அரசு கைகளைக் கட்டிக்கொண்டு, கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். ஏன் இப்படி அரசு கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருக்கிறது என்பது எங்களுக்கு வியப்பாக இருக்கிறது” என கடிந்து கொண்டனர்.

அது மட்டுமல்லாமல் நீதிபதிகள் கூறுகையில் “ கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கின் விசாரணையின்போது, எந்தவிதமான சட்டவிதிமீறலும் இருக்கக்கூடாது என குறிப்பிட்டிருந்தோம்.

அதாவது, நீங்கள் தவறான கருத்தை விதைக்கும் விளம்பரங்கள், தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை மருந்து தயாரிக்கும் உங்களைப் போன்ற நிறுவனங்கள் வெளியிடக்கூடாது என்று தெரிவித்திருந்தோம். நாங்கள் உங்களிடம் ஏதோ விளையாட்டாக இதைக் கூறவில்லை.

ஆனால், நீங்கள் நாங்கள் உத்தரவிட்டதை பொருட்படுத்தாமல், “ நிரந்தரத் தீர்வு” என்ற வார்த்தையில் மருந்துகளின் அட்டையில் விளம்பரம் செய்தீர்கள். அதனல்தான் 1954 விளம்பரச்சட்டத்தின் கீழ் உங்கள் விளம்பரங்களை வெளியிடக்கூடாது என்று தடை விதித்தோம்.

இந்த நீதிமன்றம் யோகா குரு ராம்தேவ், பதஞ்சலி ஆயுர்வேதா இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்க கடைசி வாய்ப்பு வழங்குகிறது.

இதன்படி அடுத்த ஒரு வாரத்துக்குள் இருவரும் ஏன் உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கூடாது என்று விளக்கம் அளித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். உங்கள் உறுதியான முயற்சிகளுக்கு ஏற்ப உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும். சில நேரங்களில் விஷயங்கள் தர்க்கரீதியான முடிவை எடுக்க நேரிடும்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம். அப்போது நீங்கள் இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். நீதிமன்றம் பிறபிக்கும் உத்தரவுக்கு நீங்கள் பணிய வேண்டும், நீங்கள் ஒவ்வொரு தடையையும் உடைக்கிறீர்கள். இது முழுமையான எதிர்ப்பாகும். உச்ச நீதிமன்றம் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் ஒவ்வொரு உத்தரவும் மதிக்கப்பட வேண்டும்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like