1. Home
  2. தமிழ்நாடு

உச்சநீதிமன்றம் கேள்வி : செந்தில் பாலாஜி எப்படி அமைச்சராக தொடர்கிறார்?

1

அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறிய வழக்கு விசாரணையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகம், அவருக்கு சொந்தமான இடங்களில் அதிரடியாக சோதனைகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த ஆண்டு செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து புழல் சிறையில் அடைத்தது. 471 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு செந்தில் பாலாஜி ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து அவர் ஜாமீனில் விடுதலையானார். ஆனால் ஜாமீனில் வெளியே வந்தவுடனேயே செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரானார். அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டபோது செந்தில் பாலாஜி மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த நிலையில் அதனை ராஜினாமா செய்தார். மீண்டும் அமைச்சரானதும் செந்தில் பாலாஜிக்கு அந்த 2 இலாகாவையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இந்த விவகாரம் சர்ச்சையானது. ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு உடனே அமைச்சர் பதவியா? என்று எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்ய தொடங்கினர். மேலும் சென்னையைச் சேர்ந்த வித்யாகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், ‛‛அமைச்சர் பதவியில் இல்லை எனக் காரணம் காட்டி செந்தில் பாலாஜி ஜாமீன் பெற்றுள்ளார். ஆனால் மறுநாளே அவர் அமைச்சராகி உள்ளார். செந்தில் பாலாஜிக்கு எதிராக கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் அவர் அமைச்சராக இருப்பதன் மூலம் விசாரணை பாதிக்கப்படலாம். இதனால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ‘ஜாமீன் பெற்ற மறுநாளே செந்தில் பாலாஜியை அமைச்சராக்கி இருப்பதன் மூலம் வழக்கில் தொடர்புள்ள சாட்சிகளுக்கு அழுத்தம் ஏற்படாதா? வழக்கின் விசாரணை பாதிக்கப்பட்டால், அமலாக்கத்துறை கோர்ட்டை நாடுவார்கள்” என ஏற்கனவே கருத்து தெரிவித்து இருந்தது. அதன்பிறகு இந்த வழக்கை ஒத்திவைத்தது.

இதையடுத்து இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓஹா உள்பட 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் அதிரடியான கேள்வியை எழுப்பியது. அதாவது செந்தில் பாலாஜி அமைச்சராக எப்படி தொடருகிறார்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் இந்த வழக்கில் விபரமளிக்க கால அவகாசம் வழங்கியபோதும் செந்தில் பாலாஜி தரப்பு அதுபற்றி எந்த பதிலும் அளிக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி செந்தில் பாலாஜி ஏன் அமைச்சராக நீடிக்க வேண்டும்? இந்த வழக்கின் சாட்சியங்களை பயமுறுத்த முயல்கிறார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக விரிவான பதிலை டிசம்பர் 18ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் அமலாக்கத்துறை தங்களின் வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

Trending News

Latest News

You May Like