1. Home
  2. தமிழ்நாடு

தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை: எஸ்பிஐ வங்கிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்..!

Q

தேர்தல் நிதிப்பத்திரங்கள் குறித்த வழக்கில் கடந்த மாதம் 15ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் “ தேர்தல் நிதிப்பத்திரங்கள் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது. அந்த பத்திரங்களை வாங்கியவர்கள், அதன் மூலம் நிதி பெற்ற அரசியல் கட்சிகள், பத்திரங்கள் விவரம், ஆகியவற்றை 2019ஏப்ரல் முதல் 2024ஜனவரி அனைத்து விவரங்களையும் மார்ச் 6ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். மார்ச் 13ம் தேதி தேர்தல் ஆணையம் அந்த விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்” என தீர்ப்பளித்தது.

ஆனால், காலக்கெடு முடிய இருநாட்கள் இருக்கும் நிலையில் கடந்த 4ம் தேதி எஸ்பிஐ வங்கி, உச்ச நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டு மனுத்தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் “எஸ்பிஐ வங்கி காலஅவகாசம் கேட்ட மனுவைத் தள்ளுபடி செய்கிறோம். அனைத்து விவரங்களையும் எஸ்பிஐ வங்கி வழங்க 24 மணிநேரம் அவகாசம் தருகிறோம்.

2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15ம் தேதிவரை தேர்தல் நிதிப்பத்திரங்களை யார் வாங்கியது, வாங்கியவர்கள் பெயர்கள், நிதிப் பத்திரங்களின் மதிப்பு, அந்த பத்திரங்களை எந்தெந்த அரசியல் கட்சிகள் வங்கியில்கொடுத்து பணமாக மாற்றின, எந்த தேதியில் பணமாக மாற்றப்பட்டது, தேர்தல் பத்திரங்களின் மதிப்பு ஆகிய விவரங்களை வழங்கிட வேண்டும்.

மார்ச் 12ம் தேதி வேலை நேரத்துக்குள் தேர்தல் ஆணையத்திடம் அனைத்து விவரங்களையும் எஸ்பிஐ வங்கி வழங்கிட வேண்டும். மார்ச் 15ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையம் அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்” எனத் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தேர்தல் ஆணையம் நேற்று மாலை, தேர்தல் நிதிப்பத்திரங்கள் வாங்கிய நிறுவனங்கள், பத்திரங்களை பணமாக வங்கியில் மாற்றிய அரசியல் கட்சிகள் குறித்த விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டது.

இந்நிலையில் தேர்தல் நிதிப் பத்திரங்கள் குறித்த சீரியல் எண்களை மட்டும் எஸ்பிஐ வங்கி வெளியிடவில்லை. இது குறித்து தேர்தல் நிதிப்பத்திரங்கள் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு இன்று வழக்கைப் பட்டியலிட்டு விசாரித்தது.

அப்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் அமர்வு, எஸ்பிஐ வங்கி சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் யார் எங்கிருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார். “ நாங்கள் அளித்த தீர்ப்பில் என்ன தெரிவித்திருந்தோம். தேர்தல் நிதிப் பத்திரங்கள் வாங்கியவர்கள் யார், எந்தெந்த கட்சிகள் நன்கொடை வாங்கின, எந்தெந்த கட்சிகள் பணமாக மாற்றின,

தேர்தல் பத்திரங்களின் எண்கள், பத்திரங்களின் மதிப்புகள், பத்திரங்கள் வாங்கிய தேதி, நன்கொடை வழங்கியவரின் பெயர் ஆகிய தகவல்களை வழங்கக் கோரி இருந்தோம். ஆனால், ஏன் தேர்தல் பத்திரங்களின் சீரியல் எண்களை மட்டும் எஸ்பிஐ, குறித்து தெரிவிக்கவில்லை என கடிந்து கொண்டது.

தேர்தல் பத்திர சீரியல் எண்களை ஏன் வெளியிடவில்லை என்பது குறித்து 18ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க எஸ்பிஐ வங்கிக்கு நோட்டீஸ் அனுப்ப தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர், “ தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாமா” எனக் கேட்டார்.

அதற்கு நீதிபதிகள் “ உச்ச நீதிமன்ற பதிவாளர் அந்த ஆவணங்களை ஸ்கேன் செய்து, டிஜிட்டலாக மாற்றியபின், அனைத்துப் பணிகளும் முடிந்தபின் நகல் ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிடலாம். மார்ச் 17ம் தேதிக்குள் அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் அளித்த சீல் வைத்த கவரில் உள்ள 2 ஆவணங்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like