இலங்கை தமிழரின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி..!
சட்டவிரோத தடுப்பு காவலில் தமிழ்நாடு கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் சுபாஷ்கரன் என பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கடந்த 2018ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தண்டனையை ரத்து செய்யக்கோரிய அவரது மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த சுபாஷ்கரனின் சிறை தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்தது. மேலும் தண்டனை காலம் முடிவடைந்ததும் அவர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இலங்கை தமிழரான சுபாஷ்கரன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனுவானது சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி திபங்கர் தத்தா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்," இவர் ஒரு இலங்கை தமிழர், அகதியாக வந்தவர் ஆவார், அவரது நாட்டில் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. குறிப்பாக இவரது மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் இந்தியாவில் குடியேறி விட்டனர். எனவே இவரையும் இந்தியாவிலேயே குடியேற அனுமதிக்க வேண்டும் என்று கோரினார்.
அதற்கு நீதிபதிகள், "இந்தியா என்பது உலக அளவிலிருந்து மக்கள் அகதிக0ளாக வந்து குடியேற ஒரு சத்திரம் கிடையாது. ஏற்கனவே நாட்டில் 140 கோடி மக்கள் உள்ள நிலையில், எல்லா இடங்களிலும் இருந்து வந்து இங்கு குடியேற இது சத்திரம் அல்ல, அவ்வாறு செய்யவும் இயலாது. மேலும், சட்டப்பிரிவு 19ன் படி இந்தியாவின் அடிப்படை உரிமை, குடிமக்களுக்கு மட்டும் தான் உள்ளது. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்த உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை எனக் கூறினர்
தொடர்ந்து இந்த விவகாரத்தில் மனுதாரரின் கோரிக்கையை நிராகரிப்பதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.