சுப்ரீம் கோர்ட் அதிரடி : இனி மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு தடை..!

இந்த சமூகம் நாகரிகமடைந்துவிட்டது என அனைவரும் நினைத்துக் கொண்டாலும், மனிதனின் கழிவுகளை மனிதனே அகற்றும் இழிவுநிலை இன்னும் ஒழிக்கப்படாமலே இருக்கிறது. இது மனித சமூகத்தின் மாபெரும் அவமானமாகப் பார்க்கப்பட வேண்டிய ஒன்று. இது தொடர்பாக தொடர்ச்சியான கண்டனங்களும் விமர்சனங்களும் வைக்கப்பட்டும் வருகிறது. ஒவ்வொரு நாளும் நாம் கடந்து செல்லும் பல இடங்களில் இது போன்ற நிகழ்வுகள் நம் கண்முன்னே நடந்துகொண்டே தான் இருக்கின்றன.
இதனைத் தடுப்பதற்கான 1994-ம் ஆண்டு `தேசியத் துப்புரவுப் பணியாளர் ஆணையம்' உருவாக்கப்பட்டது. இதன்மூலம், மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்தைத் தடுக்கவும், கையால் மலம் அள்ளும் இழிவுநிலை தொடர்பான அனைத்துச் சிக்கல்களைக் கண்காணிக்கவும் வழி வகுக்கப்பட்டது. பின்னர், 2013-ல் சட்டத் திருத்தம் செய்யப்பட்டு, மனிதக் கழிவுகளை மனிதர்களே கையால் அள்ளுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. எனினும், சட்டம் இருந்தாலும், நாடு முழுவதும் இந்த அவலம் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கின்றன.
இந்நிலையில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட 6 முக்கிய பெருநகரங்களில் முற்றிலும் தடை செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது எப்படி செயல்படுத்தப்பட உள்ளது என்பது தொடர்பாக பிப்.13ஆம் தேதிக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய, 6 நகரங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கும் கோர்ட் ஆணையிட்டுள்ளது. அடுத்தகட்ட விசாரணையை பிப். 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.