1. Home
  2. தமிழ்நாடு

இன்று நடக்கவிருந்த சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் திடீர் ஒத்திவைப்பு!

1

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இந்திய நேரப்படி இன்று (மே 7) காலை 8.04 மணிக்கு சுனிதா வில்லியம்ஸ், தனது மூன்றாவது விண்வெளி பயணத்தை மேற்கொள்ள இருந்தார். இந்தச் சூழலில் அவர் பயணிக்க இருந்த ‘போயிங் ஸ்டார்லைனர்’ விண்கலத்தின் பயணம் புறப்பாட்டுக்கு முன்னர் கடைசி நேரத்தில் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து விண்கலத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் என இருவரும் பத்திரமாக வெளியேறினர். உயர் ரக விண்கலமான போயிங் ஸ்டார்லைனரில் செல்லும் முதல் பெண் என்ற சாதனையை சுனிதா வில்லியம்ஸ் படைக்க இருந்தார்.

இது குறித்து நாசா விளக்கம் அளித்துள்ளது. போயிங் ஸ்டார்லைனர் விண்ணில் ஏவ சரியாக 90 நிமிடங்கள் மட்டுமே இருந்த போது அதன் ஏவுகலனான ‘அட்லஸ் – 5’ ராக்கெட்டை ஏவும் பணி நிறுத்தப்பட்டது. ஏவுகலனின் ஆக்ஸிஜன் ரிலீஃப் வால்வில் ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக இந்தப் பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க கப்பல் படை விமானியான சுனிதா வில்லியம்ஸ், கடந்த 2006-ம் ஆண்டில் நாசா மூலம் முதல் முறை தனது விண்வெளி பயணத்தை மேற்கொண்டார். அதனை அடுத்து 2012-ம் ஆண்டில் இரண்டாம் முறையாக விண்ணைத் தொட்டார். இதுவரை 322 நாட்களை அவர் விண்ணில் கழித்திருக்கிறார். அதுமட்டுமின்றி விண்ணில் நெடுநேரம் நடை பயின்ற முதல் பெண் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர். ஏழு முறை விண்வெளியில் நடைபயின்ற சுனிதா மொத்தம் 50 மணி நேரம் 40 நிமிடங்கள் விண்வெளியில் நடந்திருக்கிறார். தனது மூன்றாவது விண்வெளி பயணத்தை ஆர்வமுடன் எதிர்நோக்கி உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

Trending News

Latest News

You May Like