இம்மாத இறுதியில் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப வாய்ப்பு..!
இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கானை சுனிதா வில்லியம்ஸ் (58) மற்றும் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் 5-ம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர்.
அங்கு அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் திட்டமிட்டபடி 22-ம் தேதி பூமிக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உருவானது.
இதனால் நாசா விஞ்ஞானிகள் கவலை அடைந்தனர். இந்த பிரச்சனையால் இருவரும் எப்போது பூமிக்கு திரும்புவார்கள் என்பதில் கேள்வி எழுந்தது. இந்த சூழ்நிலையில் அவர்களை பூமிக்கு அழைத்து வருவதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் இம்மாத இறுதியில் அவர்கள் பூமிக்கு வருவார்கள் என்றும் நாசாவின் வணிககுழு திட்ட இயக்குனர் ஸ்டீவ் ஸ்டிக் தெரிவித்துள்ளார்.
மேலும் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பேட்டி அளித்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். எங்களை எப்படியும் பாதுகாப்பாக பூமிக்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தனர். இந்த புகைப்படத்தினை நாசா வெளியிட்டுள்ளது.