1. Home
  2. தமிழ்நாடு

திடீரென முறிந்து விழுந்த படிக்கட்டுகள்.. வி.சி.க எம்.எல்.ஏ காயம் ..!

1

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரும் மே 6 ஆம் தேதி சிதம்பரம் புறவழிச் சாலையில் தேர்தல் அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதற்காக மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், விழுப்புரம் தொகுதி எம்எல்ஏவுமான ரவிக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ எஸ்.எஸ். பாலாஜி, செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு உள்ளிட்டோர் இன்று மேடை அமைக்கும் பணிகளை பார்வையிட வந்தனர். மேடை அமைக்கும் பணி, பந்தல் அமைக்கும் பணி மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வரும் வழிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்ட அவர்கள் இறுதியில் மேடை மீது ஏறினர். இதற்காக தற்காலிக படிக்கட்டு அமைக்கப்பட்டிருந்தது.

முதலில் படிக்கட்டில் ஏறி எம்.பி. ரவிக்குமார் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் இருவரும் மேடைக்கு சென்றனர். அவர்களுக்கு பின்னால் எம்எல்ஏக்கள் பாலாஜி, பனையூர் பாபு உள்ளிட்டோர் சென்றனர். அப்போது மேடையின் மேல் நெருங்குவதற்கு முன்பாக கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென மேடைக்கு செல்லும் படிக்கட்டு சரிந்து விழுந்தது.

இதில் எம்எல்ஏக்கள் பாலாஜி, பனையூர் பாபு மற்றும் கட்சி நிர்வாகிகள் 3 பேர் உள்ளிட்ட 5 பேர் கீழே விழுந்தனர். மேலும் அவர்கள் இடிபாடுகளிலும் சிக்கினர். இதனால் பதற்றமடைந்த அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் உடனடியாக அவர்களை தூக்கி விட்டு மீட்டனர். இந்த சம்பவத்தில் திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ பாலாஜி கையில் லேசான காயம் ஏற்பட்டது. மேடைக்கு செல்லும் படிக்கட்டு இடிந்து அதனால் எம்எல்ஏக்கள் இருவர் விழுந்தாலும் பெரிய அளவில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படாததால் விசிக நிர்வாகிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Trending News

Latest News

You May Like