1. Home
  2. தமிழ்நாடு

#BIG BREAKING : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது..!

1

டெல்லியில் தொடர்ந்து 2வது முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால், அரசு மதுபான கொள்கையைக் கொண்டு வந்தது. ஆனால் முன்கூட்டியே அந்த கொள்கை விவரங்கள் வெளியாகி, ஏராளமான பணம் கையூட்டாகப் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்த கொள்கையையும் ஆம்ஆத்மி அரசு திரும்பப் பெற்றது.

ஆனால், இந்த கொள்கை வெளியீட்டில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கப்பிரிவு,சிபிஐ குற்றம்சாட்டி வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தன்னை தேர்தல் பிரச்சாரத்துக்குச் செல்லவிடாமல், பாஜக அரசு அமலாக்கப்பிரிவு அதிகாரிகளை ஏவிவிட்டு கைது செய்யலாம் என்று கெஜ்ரிவால் அஞ்சினார். இந்த வழக்குத் தொடர்பாக 9 முறை அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகவில்லை.

இந்தநிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் “ அமலாக்கப்பிரிவு சம்மனை ஏற்று அவர்கள் விசாரணைக்கு ஆஜராகிறேன். எந்தவிதமான நடவடிக்கையும் என் மீது எடுக்கக்கூடாது, கைது செய்யக்கூடாது என்ற உத்தரவாதம் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

. இந்த மனு நீதிபதிகள் சுரேஷ் குமார், மனோஜ் ஜெயின் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “ கெஜ்ரிவால் மனுவில் உள்ள கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். அமலாக்கப்பிரிவு நடவடிக்கைக்கு தடைவிதிக்கவும் நீதிபதிகள் மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

நீதிபதிகள் கூறுகையில் “ இரு தரப்பு வாதங்களையும் கேட்டோம். இந்த நேரத்தில் நாங்கள் கெஜ்ரிவாலுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது. மனுதாரர் இதற்கு பதில் அளிக்க சுதந்திரம் உண்டு” எனத் தெரிவித்தார். இந்த வழக்கின் விசாரணையை வரும் 22ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அமலாக்கப்பிரிவு நடவடிக்கைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டதால், எந்த நேரத்திலும் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கப்பிரிவு கைது செய்ய வாய்ப்புள்ளதாக டெல்லிவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு,வாரண்ட்டுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றுள்ளதால் அவர் கைதாக வாய்ப்பு! முன் ஜாமின் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்தநிலையில், 12 பேர் கொண்ட அதிகாரிகள் குழு சென்றுள்ளது

இந்நிலையில் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சற்றுமுன் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். 

Trending News

Latest News

You May Like