1. Home
  2. தமிழ்நாடு

திடீர் திருப்பம்..! அப்ரூவராக மாறுகிறார் முன்னாள் காவல் ஆய்வாளர்..!

1

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் போலீசார் விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த இரட்டைக்கொலை குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக அப்போதைய சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். இதில் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய ஏனைய அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த இரட்டைக்கொலை வழக்கு மதுரை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மனுதாக்கல் செய்துள்ளார். கொலை வழக்கில் முதல் நபராக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,அரசுத்தரப்பு சாட்சியாகி, அனைத்து காவலர்கள் செய்த செயல்களை சொல்ல விரும்புகிறேன். மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தந்தை, மகன் குடும்பத்திற்கு நீதி கிடைக்க விரும்புகிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக சிபிஐ பதிலளிக்க மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. 105 சாட்சிகளில் 52 சாட்சிகளிடம் விசாரிக்கலாம் என சிபிஐ எழுத்துப்பூர்வமாக தெரிவித்திருந்தது. முதல்கட்டமாக 2027 பக்கமும், 2-ம் கட்டமாக 400 பக்கமும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது சிபிஐ .

Trending News

Latest News

You May Like