திடீர் திருப்பம்..! தீ விபத்துக்குள்ளான ரயில் பெட்டியில் இருந்து கட்டு கட்டாக பணம் பறிமுதல்..!

மதுரையில் நேற்று அதிகாலை ரயில் தீ விபத்தின் போது 9 பேர் உயிரிழந்தனர். எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், உயிரிழந்த ஒன்பது நபர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று இரவு சென்னைக்கு அனுப்பப்பட்டது. சென்னையிலிருந்து உடல்கள் அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பப்படுகிறது.
இந்நிலையில் விபத்துக்கு உள்ளான சம்பவ இடத்தில், இன்றும் தடயவியல் துறையினர், ரயில்வே பாதுகாப்பு போலீஸ் ஆய்வு செய்து வருகின்றனர், குறிப்பாக மின்சார கசிவு ஏதும் இருக்கிறதா, அல்லது சிலிண்டர் வெடித்தது தான் விபத்துக்கு காரணமா என தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் தமிழக ரயில்வே பாதுகாப்பு கண்காணிப்பாளர் செந்தில்குமார் நேரில் வந்து ஆய்வு செய்தார். மேலும் தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தபோது, ரயிலில் இருந்து ஒரு இரும்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டது. அதை உடைத்து பார்த்தபோது அதில் கட்டு கட்டாக எரிந்த நிலையில், 500 ரூபாய் கட்டுகள் மற்றும் 200 ரூபாய் கட்டுகள் எடுக்கப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ஒரு லட்சத்திற்கு மேல் இருக்கும் என தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.