அரசியலில் திடீர் திருப்பம்.. பாஜகவுடன் அதிமுக கூட்டணியா..?
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து கடந்த ஆண்டு அதிமுக வெளியேறியது. அதன்பிறகு இரு கட்சிகளும் ஒன்றுக்கு ஒன்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. பாஜகவை அதுவரை விமர்சிக்காத எடப்பாடி பழனிசாமி, தற்போது நேரடியாகவே விமர்சனம் செய்து வருகிறார்.
அத்துடன், தேசியக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று தொடர்ந்து கூறி வந்தார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பல தரப்பினர் முயற்சிகள் செய்தும் பாஜக - அதிமுக கூட்டணி அமையவில்லை. இரு கட்சிகளும் தனித் தனிக் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த போதிலும் படுதோல்வியை சந்தித்தன.
இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமியிடம், உங்கள் கூட்டணிக்கு பாஜகவையும் பாமகவை வரவேற்க கதவைத் திறந்து வைத்துள்ளீர்களா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
“கதவை திறந்து வைப்பது, மூடி வைப்பது என்பதெல்லாம் அதிமுகவில் கிடையாது. மற்ற கட்சிகளில் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். அதிமுகவைப் பொறுத்த வரை ஒத்த கருத்துடைய கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து லஞ்ச லாவண்யம் நிறைந்த அரசை, ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் எண்ணம்.
“மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்த ஒத்த கருத்துள்ள அனைவரும் அதிமுக கூட்டணியில் இணையலாம். தேர்தல் நேரத்தில் அரசியல் சூழலுக்கு ஏற்றபடி எந்த கட்சி தலைமையிலான கூட்டணியில் யார் வருவார் என்பது தெரியவரும்.
தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. மற்ற திட்டங்களுக்கு நிதி இல்லை என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். முட்டுகாட்டில் கலைஞர் பெயரில் பன்னாட்டு அரங்கம் அமைக்க மட்டும் நிதி எங்கிருந்து வந்தது?” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.