அரசியலில் திடீர் திருப்பம்..! பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறும் ஓபிஎஸ்?..
பிரதமர் நரேந்திர மோடி,அமித்ஷா என பாஜகவிலிருந்து அடுத்தடுத்த புறக்கணிப்பால் ஓபிஎஸ் கடும் அதிருப்தியில் இருக்கிறார்.
குறிப்பாக ஏப்ரல் மாதம் அமித்ஷா சென்னை வந்தபோது தன்னை சந்திக்காதது வருத்தம் அளிப்பதாகவும், தாங்கள் பாஜக கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா என்பதை பாஜக தான் விளக்கம் வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது அவரை சந்திக்க அனுமதி கேட்டு ஓபிஎஸ் கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி, ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம் ஆகியோரை வரவேற்க அனுமதித்த பிரதமர் மோடி, ஓபிஎஸுக்கு அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இதனிடையே, BJP கூட்டணி மிகவும் ஆபத்தானது என ஓபிஎஸ்-ன் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன் சூடு அடங்குவதற்குள் மத்திய அரசை கண்டித்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிறாரா, இல்லையா என்று தெரியாத நிலையில், முதல் முறையாக மத்திய அரசை விமர்சனம் செய்து ஓபிஎஸ் காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை பின்பற்றாததன் காரணமாகசமக்ரா சிக்சஷா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய ரூ.2152 கோடி நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. சமக்ரா சிக்ஷா நிதி நம்பி தனியார் பள்ளிகளில் 65 லட்சம் மாணவர்களும், 6 லட்சம் ஆசிரியர்களும் பயனடைந்து வருகின்றனர். மத்திய அரசு நிதியை நிறுத்தி வைத்துள்ளதால் தனியார் பள்ளிகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 25% மாணவர்களை தனியார் பள்ளிகளில் சேர்க்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தற்போது தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களின் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது. மத்திய அரசின் நிபந்தனைகளை மாநில அரசு ஏற்காதது என்பது மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான பிரச்னை. இந்த காரணத்திற்காக நிதியை விடுவிக்காமல் இருப்பது அப்பாவி ஏழை மாணவர்களின் கல்வியையும், ஆசிரியர்களையும் பாதிக்கும் செயல்” என்று குற்றம்சாட்டினார்.
இது கடும் கண்டனத்திற்குரியது என்றும் குறிப்பிட்ட ஓபிஎஸ், “மத்திய அரசின் நடவடிக்கை கூட்டாட்சித் தத்துவத்திற்கும், கல்வி உரிமைச் சட்டத்திற்கும் எதிரானது” என்று கூறியுள்ளார். ஆகவே, ரூ.2152 கோடி கல்வி நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர், NDA-வில் இருந்து விலகி, விஜய் கூட்டணியில் இணைய உள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.