திடீரென கட்டான மின்சாரம்.. அரசு மருத்துவமனையில் மூச்சுத்திணறி நோயாளிகள் உயிரிழப்பு ?

திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கொரோனா மற்றும் பல்வேறு நோய் பாதிப்புக்கு ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் திடீரென 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டுள்ளது. அப்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தர்களுக்கு சீராக ஆக்சிஜன் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு விரைந்தார். சம்பவம் தொடர்பாக மருத்துவமனை ஊழியர்களிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த அவர், மருத்துவக்கல்லூரி கட்டுமான பணியின்போது மின் ஒயர்கள் துண்டிக்கப்பட்டதால் மின்தடை ஏற்பட்டதாகவும், கட்டுமான பணி ஒப்பந்ததாரர் மற்றும் சைட் இன்ஜினியர் அலட்சியமாக செயல்பட்டதே இந்த சம்பவத்திற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், நோயாளிகள் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், கட்டுமான பணி ஒப்பந்ததாரர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய ஆணையிட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
newstm.in