இதுபோன்ற அதர்மிகளை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் : செண்டலங்கார ஜீயர்..!
உதயநிதியின் பேச்சு குறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய மன்னார்குடி ஜீயர், “அரசாங்கத்தில் இருக்கக் கூடிய அமைச்சர் சாதி மத வேறுபாடு இல்லாமல் இருக்க வேண்டும்.
அரசாங்கம் என்பது அரசாங்கமாக இருக்க வேண்டும். மாறாக சாதி, மதம் பார்ப்பதாக இருக்கக்கூடாது. உதயநிதிக்கு தைரியம் இருந்தால், சர்ச், மசூதிக்குள் சென்று உங்களுடைய தர்மத்தில் இருக்கக் கூடிய தவறை சரி செய்யுங்கள் என்று சொல்ல முடியுமா.அப்படி சொல்லக் கூடிய தைரியம் இருந்தால் அவர், சனாதனத்தை பற்றி பேசட்டும். அமைச்சராக நீடிக்கட்டும்.
ஈசல், கழுகுக்கு சமமாக உயர பறக்கப் போனால், அதன் ரெக்கை உதிர்ந்து கீழே விழுந்துவிடும். அதனை எறும்புகள் அரித்துவிடும். அதுபோன்று இவர்கள் சனாதனத்தை பற்றி பேசினால் இந்த ஈசலுக்கு ஏற்பட்ட நிலைமைதான் வரும். இதுபோன்ற அதர்மிகளை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். நம்முடைய மக்கள் தொகையில் பெரும்பாலானோர் இந்து தர்மிகள் தான். மற்றவர்கள் 9 சதவிகிதத்தினர் தான் இருக்கின்றனர். 91 சதவிகித இந்துக்களுக்கு எதிராக இருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
தர்மத்துக்காக பாடுபட்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால் தர்மத்தின் பேரை சொல்லி சில பேர் சம்பாதிப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தான் இவர்கள்.
கர்நாடகாவில் இருக்கக் கூடிய நம்மாழ்வார் சன்னிதியில் அத்தனை அர்ச்சகர்களும் எஸ்.சியைச் சேர்ந்தவர்கள். பறையர் சமூகத்தை சேர்ந்தவர்கள் பூஜை செய்வது உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர். அவர்கள் எல்லோரும் தமிழர்கள் தான்.இவர்கள் எதுவுமே தெரியாமல் பேசக்கூடாது. வாக்கு வங்கிக்காக இதுபோன்று செய்கின்றனர். இதே உதயநிதி திருகோயிலூர் ஜீயர் மடத்துக்கு சென்றிருக்கிறார். அவர் அம்மா கோயில் கோயிலாக செல்கிறார். வீட்டில் இருப்பவர்களையே தடுக்க முடியவில்லை.இவர்கள் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் சாதியை குறிப்பிடுக்கிறார்கள். ஏன் சாதி இல்லாத மனிதன் என்று சொல்ல வேண்டியதுதானே” என்று கேள்வி எழுப்பினார்.
சனாதன தர்மம் குறித்து பேசிய உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி விலை நிர்ணயித்து வடமாநில சாமியார் ஆச்சாரியா பேசியுள்ளது தவறா சரியா என்ற கேள்விக்கு. “தவறு என்று சொல்ல மாட்டேன். சனாதன தர்மம் என்பது தாய்க்கு நிகரானது. உங்கள் அம்மாவை திட்டினார்கள் என்றால் சும்மா இருப்பீர்களா? உதயநிதிக்கு அவர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்” என்றார்.
சனாதனம் என்பது பழமையை குறிப்பது. அதன் நடைமுறைகளை மாற்றக்கூடாது. சனாதன தர்மத்துக்குள் சாதியை புகுத்தக்கூடாது. எனவும் செண்டலங்கார ஜீயர் கூறினார்.